search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் விழுந்தது"

    குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு அனைத்து மாவட்டங் களிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இது புயலாக மாறியது. இதற்கு சாகர் என்று பெயரிட்டு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையங்கொண்டிருப்பதாக கூறியது. இது தென்மேற்கு திசையில் நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தது.

    வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குருந்தன்கோடு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அங்க அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, ஆரல்வாய் மொழி, மயிலாடி, கொட்டாரம், இரணியல், குளச்சல், அடையாமடை, கோழிப் போர்விளை பகுதி களிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    இடி-மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து ராஜாக் கமங்கலம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், குலசேகரம், திருவட்டார், நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு ரோட்டில் சாய்ந்தது. மரக்கிளைகள் மின் கம்பம் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் அறுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன. மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி அளவு கொள்ளளவு கொண்ட பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.10 அடியாக இருந்தது. அணைக்கு 286 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.75 அடியாக இருந்தது.

    சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கு மேற்பட்ட குளங்களில் 250-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    திருவட்டார், குலசேகரம், ஈத்தாமொழி பகுதிகளில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.6, பெருஞ்சாணி - 38.8, சிற்றாறு 1-31.6, சிற்றாறு 2-30.4, மாம்பழத்துறையாறு-112, நாகர்கோவில்-96, பூதப்பாண்டி - 54, சுருளோடு- 60, கன்னிமார் - 11, முள்ளங்கினாவிளை - 54, புத்தன் அணை- 41, திற்பரப்பு -72, ஆரல்வாய்மொழி- 13, குருந்தன்கோடு - 154, பாலமோர் - 22, மயிலாடி -63, கொட்டாரம் - 44, இரணியல் -47, ஆணைக்கிடங்கு - 112, குளச்சல் - 64, அடையாமடை - 48, கோழிப்போர்விளை - 52.

    ×